Top Ad

Sign Up To The Free Email Newsletter!

Want to get notified whenever we produce the latest content ? Then subscribe now to start receiving hot updates from today.

1.8.13

Madras Famine - Sad Truth About Our Past History !!!

On : 07:28
மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள் }

சுமார் 375 ஆண்டு வரலாறு கொண்ட மெட்ராஸ் மாநகரம் நல்லது, கெட்டது என நிறைய விஷயங்களைப் பார்த்துவிட்டது. மெட்ராசையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை இந்த நகரம் சந்தித்த பஞ்சங்கள். பஞ்சத்தால் பறிபோன உயிர்களும், பஞ்சத்தோடு போராடிய உயிர்களும் நிறைய பாடங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றன.

1640இல் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மதராசபட்டினத்தில் கோட்டை கட்டி குடியேறினர். அடுத்த ஏழே ஆண்டுகளில் மிகக் கொடியதொரு பஞ்சத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அப்போது மெட்ராஸ் என்ற நகரம் இந்தளவு விரிவடைந்திருக்கவில்லை. இப்போது இருப்பதில் சிறிதளவே நகரின் மொத்த பரப்பளவாக இருந்தது.

1647, ஜனவரி 21ஆம் தேதியிடப்பட்ட ஒரு ஆங்கிலேயக் குறிப்பு இந்த பஞ்சத்தை பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. ”இந்த சிறிய ஊரிலேயே 3000க்கும் குறைவில்லாமல் மனிதர்கள் இறந்திருக்கின்றனர். போர்த்துகீசியக் காலனியிலோ 15,000 மனிதர்கள் இறந்துவிட்டனர். இப்போது நம்மிடம் இருக்கும் நெசவாளர்கள், தச்சர்கள் எல்லாம் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டனர். 25 ஆங்கிலப் படை வீரர்கள் இறந்துவிட்டனர், பலர் நோயுற்றுள்ளனர்” என்று அந்த குறிப்பு சொல்கிறது.

இந்த பஞ்ச காலத்தில் கோட்டைக்கு வெளியே சாந்தோம் போன்ற பகுதிகளில் இருந்த பல ஆங்கிலேயர்களும் கோட்டைக்குள் தஞ்சம் புகுந்துவிட்டனர். எனவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கோட்டையில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இதனை சமாளிக்க சூரத்தில் இருந்து அரிசியை வரவழைத்திருக்கிறார்கள். ஒருவழியாக ஓராண்டில் இந்த பஞ்சத்தை சமாளித்து இயல்பு நிலைக்கு மீண்டிருக்கிறார்கள்.

அடுத்த பஞ்சம் 1658இல் தலையெடுத்தது. அப்போது கோல்கொண்டா, சந்திரகிரி வீரர்களும் மெட்ராசில் இருந்தால் அனைத்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியது. இதேநேரத்தில் வடநாட்டிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதையும் ஒருவழியாக சமாளித்த நிலையில் 17ஆம் நூற்றாண்டின் கடைசிப் பஞ்சம் 1686இல் வந்தது. ஏற்கனவே இரண்டு பஞ்சங்களைப் பார்த்துவிட்டதால், கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுக்கு இதனை சமாளிப்பதில் சற்று அனுபவம் கிடைத்துவிட்டது. நிவாரணப் பணிகளை எப்படி மேற்கொள்வது என அவர்கள் ஓரளவு கற்றுக் கொண்டனர்.
அடுத்து 18ஆம் நூற்றாண்டிலும் பஞ்சங்களுக்கு பஞ்சமில்லை. இதுபோன்ற பஞ்சங்களால் கிராமப்புற மக்கள் பிழைக்க வழி தேடி மெட்ராஸ் நோக்கி படையெடுத்தனர். பல இடங்களில் பொருட்கள் சூறையாடப்பட்டன. வியாபாரிகள் பொருட்களை பதுக்கிவைத்து கொள்ளை லாபம் சம்பாதித்தனர். இவற்றைத் தடுக்க சில ஆணைகள் இடப்பட்டும் பெரிதாக எந்த பலனும் இல்லை. இந்த ஆணைகள் ஆங்கிலேய வணிகத்தை பாதிக்கும் என உணரப்பட்டதால் சிறிது காலத்திலேயே அவை விலக்கிக் கொள்ளப்பட்டன.
1781இல் வந்த பஞ்சம்தான் மிகவும் கொடுமையானதாக கருதப்படுகிறது. அந்த ஆண்டு இறுதியில் மதராசப்பட்டினத்தில் 42 நாட்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் மட்டுமே இருந்தன. எனவே ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டு முதன்முறையாக ரேஷன் முறை அமலுக்கு வந்தது.
இதனிடையே சோற்றுக்கு வழியில்லாமல் பரிதவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக இன்றைய ஸ்டான்லி மருத்துவமனை இருக்கும் இடத்தில் ஒரு கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து கஞ்சி வாங்கி குடித்து தங்களின் பசியைப் போக்கிக் கொண்டனர். அடுத்த ஓராண்டில் இந்த இடம் ஒரு சத்திரமாக மாறியது. நிறைய முதியவர்கள் இருந்ததால், அவர்களுக்கு மருத்துவ வசதியும் தேவைப்பட்டது. எனவே இங்கு ஒரு சிறிய மருத்துவமனையும், தொழுநோயாளிகளுக்கான இல்லமும் தொடங்கப்பட்டது. 1799இல் தொடங்கப்பட்ட இதுதான் உள்ளூர்வாசிகளுக்கென பிரத்யேகமாக உருவான சென்னையின் முதல் நவீன மருத்துவனை. உள்ளூர்வாசிகள் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று அழைத்த இதுதான் பின்னாட்களில் ஸ்டான்லி மருத்துவமனையாக உயர்ந்தது.
19ஆம் நூற்றாண்டிலும் அடிக்கடி பஞ்சங்கள் வந்துபோகத் தவறவில்லை. 1824இல் பஞ்சம் வந்தபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மெட்ராசில் ஒரே ஒரு கடையில்தான் தானியம் விற்கப்பட்டதாம். பல இடங்களில் கலகங்கள் வெடித்ததால் ராணுவத்தை வைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

1876-78 காலகட்டத்தில் மெட்ராஸ் ராஜ்தானி முழுவதும் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. சிறந்த நிர்வாகியான பக்கிங்ஹாம் இளவரசர் ரிச்சர்ட்,இந்த பஞ்சத்தை திறமையாகவே கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பஞ்ச காலத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை வேகமாக கொண்டு செல்ல வசதியாக, மரக்காணத்தில் இருந்து காக்கிநாடா வரை கால்வாய் வெட்டினார். சென்னையில் கூவம் நதி ஓடிக் கொண்டிருக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் பிறந்தது இப்படித்தான்.
இதுமட்டுமின்றி மேலும் பல புதிய முயற்சிகளும், நிர்வாக சீர்திருத்தங்களும் பஞ்சங்களின் பயனாகவே விளைந்தன. மொத்தத்தில் மெட்ராஸ் மாநகரம் தோன்றிய காலம் முதல் தொடர்ந்து பல பஞ்சங்களை சந்தித்து பல பாடங்களை சேகரித்து வைத்திருக்கிறது. இந்த பாடங்களே இந்த மாநகரை இன்றும் காக்கின்றன.
* பஞ்ச காலத்தில் தானியங்களை பதுக்கியதற்காக நல்லண்ணா என்ற வியாபாரிக்கு பொதுமக்கள் முன்னிலையில் 25 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
* பஞ்சங்களால் 1825 முதல் 1854 வரை மெட்ராஸ் கடும் பொருளாதார பின்னடைவை சந்தித்தது

0 comments :

Post a Comment