புகழ் பெற்ற கணிதமேதை ராமானுஜர். இவர் பிறந்த வீடு நமது ஈரோட்டில் உள்ளது. இந்த வீட்டை தற்போது கணித அருங்காட்சியமாக மாற்றவுள்ளனர். இது குறித்து புதன்கிழமை ஈரோடு மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.]
அழகியசிங்கர் வீதியில்...
உலகப் புகழ்பெற்ற கணிதமேதை ராமானுஜர், ஈரோடு அழகர்சிங்கர் வீதியில் 1887-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி பிறந்தார். அவரின் தந்தையின் பெயர் சீனிவாசன், தாயார் பெயர் கோமளத்தம்மாள்.
பூர்வீகம் கும்பகோணம்
கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்டவரான ராமாஜனுரின் தாய்வழிப் பாட்டனார் ஈரோடு நீதிமன்றத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். எனவே, கோமளத்தம்மாள், தனது பிரசவத்துக்காக ஈரோட்டுக்கு தாய் வீட்டுக்கு வந்தார். இங்கு ராமானுஜரின் பிறப்பு குறிப்பு, அப்போதைய ஈரோடு நகர்மன்ற ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய தேற்றங்களின் தோற்றம்:
குழந்தை பருவத்தில் சில ஆண்டுகள் வரை ஈரோட்டில் இருந்த அவர், பள்ளிப் படிப்பு படிக்க கும்பகோணம் சென்றுவிட்டார். தனது 13-வது வயதில் புதிய தேற்றங்களை கண்டறியத் தொடங்கினார். கல்லூரியில் சேர்ந்தபோது கணக்குப் பாடத்தில் மட்டும் மிகச் சிறப்புடன் மதிப்பெண்களைப் பெற்றார்.
தேர்வில் தோல்வி:
கல்லூரி படிப்புக்கு முந்தைய படிப்பான எஃப்.ஏ. படிக்கும்போது ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறாததால், 1912-ம் ஆண்டில் சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் குமாஸ்தாவாக சேர்ந்து பணியாற்றினார்.
ஹார்டியும், ராமானுஜரும்...
அப்போது இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணித பேராசிரியர் ஹார்டி வெளியிட்ட கணித புதிருக்கு உலகில் பல நாடுகளில் இருந்தும் பலர் விடைகளை அனுப்பி வைத்தனர். ஆனால், ராமானுஜர் அனுப்பிய விடைதான் மிகச்சரியாக இருந்தது. இதைத் தொடர்ந்து ஹார்டிக்கும், ராமானுஜருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.
ஹார்டி தான் காரணம்:
கடந்த 1913-ம் ஆண்டில் ராமானுஜர் தனது கணித ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை ஹார்டிக்கு அனுப்பி வைத்தார். ஹார்டிதான் பின்னாளில் ராமானுஜரின் திறமைகளை உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார்.
4000 கணக்குகளும்...
அதன் விடைகளும்... கணிதத்தில் உச்சத்தைத் தொட்ட ராமானுஜர், மூன்று நோட்டுகள் விட்டுச் சென்றுள்ளார். அதில், 4000 கணக்குகளும், அதற்கான விடைகளும் தரப்பட்டுள்ளன. 1920-ம் ஆண்டில் அவர் மறைந்தபோது, அவருக்கு வயது மூப்பத்திரெண்டு அரை தான். அவர் கண்ட கணித முடிவுகள் இயற்பியல், கணினி இயல் துறைகளிலும் பயன்படத் தொடங்கியுள்ளன.
அருங்காட்சியமாகும் வீடு
இப்படிப்பட்ட பெருமைமிக்க கணிதமேதை பிறந்த வீட்டை கணித அருங்காட்சியகமாக மாற்றும் மாநகராட்சியின் முயற்சிக்கு ஈரோட்டில் வரவேற்பு கிடைத்துள்ளது.
HOUSE IN KUMBAKONAM
அப்படியே கிடக்கும் கல்வெட்டு
இதுகுறித்து தமிழக பசுமை இயக்கத் தலைவர் ப.ஜீவானந்தம் கூறும்பொழுது, ‘ கணிதமேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு கல்வெட்டை வ.உ.சி. பூங்காவில் வைக்க 1987-ல் ஈரோடு நகர்மன்றத்தில் அனுமதி கேட்டோம். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அந்தக் கல்வெட்டு அப்படியே கிடக்கிறது. அவர் பிறந்த வீட்டில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். ஈரோடு மாநகராட்சியின் முயற்சி பாராட்டுக்குரியது' என்றார்.
கணித மாணவர்களுக்கு பயன் தரும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் என்.மணி கூறும்போழுது, 'கணிதமேதை ராமானுஜரின் பிறந்த வீட்டை பார்க்க வெளிநாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரோட்டுக்கு கணித ஆய்வாளர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், அதை முழுமையாக பார்த்து ஆய்வு செய்ய அவர்களுக்கு முடியவில்லை. எனவே, ஈரோட்டில் கணித அருங்காட்சியகம் அமைக்கும்போது கணித ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவ, மாணவியரும் மிகவும் பயனுள்ளதாக அமையும்' என தெரிவித்தார்.
கணக்கு வீடு: கணித மேதை ராமானுஜர் பிறந்ததாக கருதப்படும் வீடு, ராமானுஜரின் குடும்பத்தினரிடம் இருந்து இதுவரை, 2 பேரிடம் கைமாறிவிட்டது. 1950-ம் ஆண்டுக்கு பின்னர் வாங்கிய கல்வி நிறுவன உரிமையாளர் வசம் தான், இப்போது அந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் பிறந்த குழந்தைகள் 5 பேர் முதுநிலை கணக்கு பாடத்தில் மிகச்சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சிப்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் அனுமதி:
ராமானுஜர் பிறந்த வீடு, கணித அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளதுகுறித்து, ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம் கூறியதாவது, ' கணித மேதை ராமனுஜரின் பிறந்த வீட்டை, நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது. பல அமைப்புகள், கணித ஆர்வலர்கள் மனு அளித்து வருகின்றனர். எனவே, கணித மேதை ராமானுஜர் பிறந்த வீட்டை கணித அருங்காட்சியகமாக மாற்ற மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம் உறுதி அளித்துள்ளார். எனவே, இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும்' என்றார்.
0 comments :
Post a Comment